Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

அடுத்த வருட முற்பகுதியில் 8,000 புதிய ஆசிரியர் நியமனம்...!

 

அடுத்த வருடத்தின் முதல் பகுதியில் 8,000ஆசிரியர்களை புதிதாக பாடசாலைகளுக்கு நியமிக்க தீர்மானித்துள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அது தொடர்பில் உரிய நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த அவர், கல்வியியற்கல்லூரிகளில் அதற்கான பரீட்சைகளை நடத்துவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதுடன் அதற்கிணங்க அடுத்த வருட ஆரம்ப பகுதியில் 8000ஆசிரியர்களை புதிதாக நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் சபையில் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையில் ஹேஷா விதானகே எம்.பி எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதில ளிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

அதேவேளை, ஆசிரியர் சேவையில் இணைந்து கொள்வதற்கு விருப்பமுடைய அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், பரீட்சை ஒன்றை நடத்தி அதன் மூலம் பெற்றுக் கொள்ளப்படும் புள்ளிகளின் அடிப்படையில் மாகாண சபை பாடசாலை ஆசிரியர்களாக அவர்களை நியமிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

அவர்களை ஆசிரியர் சேவையில் இணைத்துக் கொண்டதன் பின்னர் மூன்று வருடங்களுக்குள் தேசிய கல்வி நிறுவனத்தின் ஒரு வருட டிப்ளோமா பாட நெறியை பூர்த்தி செய்வதற்கு சந்தர்ப்பமளித்து பயிற்சி ஆசிரியர்களாக அவர்களை உருவாக்குவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். கல்வியியற் கல்லூரிகள் 1986ஆம் சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்டது. அதன் மூலம் முதலாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரையிலான திறமை படைத்த பயிற்சி ஆசிரியர்களைப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது.

கடந்த இரண்டு வருடங்களின் அடிப்படையில் அவ்வாறு 8000 பேருக்கு பரீட்சைகளை நடத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அந்த வகையில் அடுத்த வருடம் முதல் பகுதியில் அந்த 8000 பேரையும் பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli