Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

இஸ்லாத்தின் பார்வையில் சேமிப்பு...


பொருளாதார நெருக்கடிக்கு முகங்கொடுப்பதற்கு முன்வைக்கப்படுகின்ற தீர்வுகளில் சேமிப்பும் ஒன்றாகும். இஸ்லாம் பதுக்கலுக்கு அனுமதிக்காது சேமிப்புக்கு இடமளித்திருக்கின்றது. ஆன போதிலும் சேமிப்பு தொடர்பில் மயக்கமான நிலைப்பாடே சமூகத்தில் காணப்படுகிறது.

செயற்கையாக பொருட்களின் விலையை அதிகரித்து, விற்பனை செய்து அதிக இலாபத்தை பெறுவதற்கான முயற்சி பதுக்கல் எனப்படுகிறது. சமூகத்தில் சிலர் பதுக்கலை போன்றே சேமிப்பையும் கூடாது என்று கருதி தவிர்ந்து கொள்வதனை காண முடிகிறது. பதுக்கலும் சேமிப்பும் இரண்டும் இரண்டு விடயங்களாகும்.

சேமிப்பு என்பது ஒருவன் தனக்கும் தனது குடும்பத்தவர்களுக்கும் ஒரு வருட செலவுக்கு தேவையான அளவு பொருட்களை சேமித்து வைத்துக் கொள்வதனைக் குறிக்கும். இது தடுக்கப்பட்ட பதுக்கலாகக் கருதப்பட மாட்டாது.

மாற்றமாக இது அனுமதிக்கப்பட்டது. இவ்விடயத்தில் கருத்து முரண்பாடுகளும் இல்லை. 
(ஆதாரம்: உம்ததுல் காரிஃ)

இஸ்லாம் சேமிப்பை அனுமதித்துள்ளதோடு எதிர்கால திடீர் நிகழ்வுகளை கருத்தில் கொண்டு அதனை தூண்டியுமுள்ளது.

இஸ்லாம் நல்ல விடயங்களில் கூட வீண்விரயம் செய்வதனைத் தடுத்துள்ளது. தானியங்கள், பழவகைகளின் ஸகாத் தொடர்பில் அல்குர்ஆன் குறிப்பிடும் போது 'அறுவடை செய்யும் நாளில் அல்லாஹ்வின் பங்கை கொடுத்து விடுங்கள், வீண் விரயம் செய்யாதீர்கள், நிச்சயமாக வீண் விரயம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்' 
(ஆதாரம்: அஃராப் - 141) என்றுள்ளது.

'உறவினர்களுக்கும் ஏழைகளுக்கும், வழிப்போக்கர்களுக்கும் அவர்களது உரிமைகளைக் கொடுத்து விடுங்கள். வீண் விரயம் செய்யாதீர்கள். நிச்சயமாக விரயம் செய்கின்றவர்கள் ஷைத்தானின் சகோதரர்களாவர். ஷைத்தான் தனது இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான்' (ஆதாரம்: இஸ்ரா 26, 27) என்பது இறைவாக்காகும்.

ஸஃத் இப்னு அபீவக்காஸ் (ரழி) அவர்கள் ஒரு செல்வந்தராக இருந்தவர். அவரது வாரிசு சொத்தைப் பெறுவதற்காக ஒரேயொரு பெண் பிள்ளை மாத்திரமே இருந்தது.

அவரும் நோயுற்றிருந்தார். இந்நிலையில் அவர் தனது சொத்துக்கள் அனைத்தையும் தர்மம் செய்வதற்கு முயற்சித்த போது அதனை நபி (ஸல்) அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. சொத்துகளின் அரைவாசியை தானமாகக் கொடுக்க முன்வந்த போதும் அதுவும் மறுக்கப்பட்டது. மூன்றில் ஒரு பகுதியைக் கொடுக்க முன்வந்தார்கள். அப்போது கூட நபியவர்கள் 'மூன்றில் ஒன்றுகூட அதிகம் தான்.

உங்களது வாரிசுகளை மனிதர்களின் கையில் உள்ளவற்றை பிச்சை கேட்கக்கூடியவர்களாக விட்டுச் செல்வதனைவிட செல்வந்தர்களாக விட்டுச் செல்வதே சிறந்தது' என்றார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

கஃப் இப்னு மாலிக் (ரழி) அவர்கள், தபூக் நிகழ்வில் கலந்து கொள்ளாது பின்வாங்கினார்கள். அவரிடம் ஏற்புடைய எவ்வித நியாயங்களும் காணப்படவில்லை. இதன் காரணமாக அவர் தண்டிக்கப்பட்டார்.

அவர் மன்னிக்கப்பட்டதன் பின்னர் 'எனது சொத்துகள் அனைத்தையும் நான் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் ஸதகாவாக கொடுத்து விட்டேன், அவற்றிலிருந்து நான் நீங்கிவிட்டேன். இதுவே எனது தவ்பாவாகும்' என்று குறிப்பிட்டார். அப்போது நபியவர்கள் 'உங்களது சொத்தின் ஒரு பகுதியை நீங்கள் வைத்திருங்கள், அது உங்களுக்கு சிறந்தது' என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி, முஸ்லிம்)

வீண் விரயம் செய்யாது எதிர்காலத் தேவைகளுக்காக சேமிப்பது தூண்டப்பட்டுள்ளமையை இந்த இறைவசனங்களும் நபிமொழிகளும் எடுத்தியம்பியுள்ளமை தெளிவாகிறது.

அடுத்து நேரடி சேமிப்பு குறித்து நோக்கினால் 'எதிர்காலத்தில் இப்படி ஏற்படலாம்' என்ற எடுகோலை எதிர்கொள்வதில் சேமிப்புக்கு பெரும் பங்கு உண்டு.

இத்தகைய நிலைகள் ஏற்படும் போது மனிதன் மிகவும் தடுமாற்ற நிலைக்கு உள்ளாகிறான்.

பதற்றம் காரணமாக சிலர் பிழையான முடிவுகளைக்கூட எடுப்பார்கள். அது ஒரு பெரும் தீங்கை ஏற்படுத்தலாம். திருட்டு, வட்டி, கொலை, கொள்ளை போன்றன கூட ஏற்படலாம். சேமிக்காது இருப்பது தீமைக்கு இட்டுச்செல்லும் நிலையில் சேமிப்பு ஒரு வரவேற்கத்தக்க விடயமாகும்.

சேமிப்பு மனதுக்கு நிம்மதியைக் கொடுக்கிறது
நல்ல வேலைகளையும் பொதுப்பணிகளையும் செய்வதற்கும் உதவியாக அமையும். இவற்றின் பிரதிபலனாக வளங்களும் அதிகரிக்கும்.

பஞ்சத்தை எதிர்கொள்வதற்காக யூசுப் (அலை) அவர்களின் திட்டமும் இதனையே சுட்டிநிற்கிறது. அவர் தொடராகப் பயிரிட்டார். வளமான ஏழு வருடங்களின் அறுவடையை சேமித்தார். சிக்கனமாகவே பயன்படுத்தினார். 'நீங்கள் ஏழு வருடங்களுக்குத் தொடராக விவசாயம் செய்வீர்கள். உண்பதற்காக பயன்படுத்தும் சிறிய பகுதியைத் தவிர பெரிய பகுதியை அறுவடை செய்யாது கதிர்களிலே விட்டு விடுங்கள்'
(ஆதாரம்: யூசுப் 47)

அறுவடை செய்யாது கதிர்களிலே விட்டு விடுதல் என்பது சேமிப்பதற்கும், பஞ்சமான காலத்தில் தேவைப்படும் போது பயன்படுத்வதற்குமான உத்தியாகும்.

சூறா கஹ்பில் மூஸா (அலை) அவர்களும் அறிவுள்ள ஒரு நல்ல மனிதரும் சென்ற பயணத்தின் போது ஒரு சிறந்த பெற்றார் தனது பிள்ளைகளின் நலன் நாடி மறைத்து சேமித்து வைத்திருந்த புதையலை பற்றிய விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
(ஆதாரம்: கஹ்ப் 77, 82)

நபி (ஸல்) அவர்கள் கைபரில் கிடைத்தவை மூலம் ஒரு வருடத்துக்கு குடும்பத்துக்கு தேவையானவைகளை சேமித்து வைத்திருந்தார்கள்.

அன்னார் பனூ நழீர் கோத்திரத்தின் பேரீச்சம் பழங்களை விற்பனை செய்வார்கள். அதன் மூலம் ஒரு வருடத்துக்கு தேவையான உணவுப் பொருட்களை சேமிப்பார்கள்.
(ஆதாரம்: புஹாரி)

இந்த ஹதீஸை பதியும் போது 'ஒரு மனிதன் தனது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்துவதற்காக தனது குடும்பத்துக்காக ஒரு வருட உணவை சேமித்து வைத்தல் தொடர்பான பாடம்' என்று இமாம் புஹாரி அவர்கள் தலைப்பிட்டுள்ளார்கள். இதனை ஆதாரமாக வைத்து 'ஒரு வருடத்துக்கு தேவையான உணவை சேமிப்பது அனுமதிக்கப்பட்டது' என்று இமாம் இப்னு தகீகுல் ஈத் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். 'நடைமுறையின் அழுத்தம் காரணமாகவே ஒரு வருடம் சேமித்தார்' என்று இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானி (ரஹ்) குறிப்பிடுகிறார்.
(ஆதாரம்: பத்ஹுல் பாரி)

சேமிப்பு தொடர்பில் ஸஹாபாக்களின் கூற்றுகளும் காணப்படுகின்றன. அலி (ரழி) அவர்கள் பஸராவில் இருந்த தனது பணியாளருக்கு எழுதிய கடிதத்தில் 'வீண் விரயத்தை விட்டுவிடுங்கள், நாளைய விடயங்களை இன்றே சிந்தியுங்கள், தேவையான அளவு பணத்தை கையில் வைத்திருங்கள், மேலதிகமாக உள்ளவற்றைத் தேவையேற்படும் போது பயன்படுத்துவதற்காக சேமித்து வையுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: நஹ்ஜுல் பலாகா)

அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரழி) அவர்கள் 'நீ உனது உலக செயல்பாடுகளில் ஈடுபடும் போது எப்போதும் வாழ்பவன் போன்று செயல்படு, உனது மறுமை விடயங்களில் செயல்படும் போது நாளையே மரணிப்பவனை போன்று ஈடுபாடு காட்டு' என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: உயூனுல் அக்பார்) சேமிக்கின்ற ஒருவரைப் பார்த்து நிலையாக வாழ்பவர் போன்று சேமிக்கிறார் என்று குறை சொல்ல முடியும். இவ்விடயத்தில் நாம் நடுநிலையாக நடந்து கொள்வதே சாலச்சிறந்தது. சேமிப்பு என்பது இஸ்லாம் அனுமதித்த ஒரு விடயம். ஆனால் முன்னெச்சரிக்கையுடன் கவனமாக இருக்க வேண்டும் என்று கட்டளைகள் காணப்படுகின்றன. அவசரப்படுவதையும் பிரபஞ்ச நியதிகளை புறத்தொதுக்குவதும் கண்டிக்கப்பட்டுள்ளன.

செல்வம் வெறுக்கப்படவில்லை, மாற்றமாக உழைப்பு, முன்னேற்றம் போன்ற விடயங்களின் பால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன. இதற்கான விரிவான வழிகாட்டல்களும் வழங்கப்பட்டுள்ளன.

யூ.கே. ரமீஸ்
MA சமூகவியல்

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli