Trending

6/recent/ticker-posts

Header Ads Widget

சுவர்க்கம் பெற்றுத்தரும் நான்கு காரியங்கள்...!


மறுமை நாளில் இறைவன் வழங்கும் உயர்ந்த சுவர்க்கத்தைப் பெற்றுக்கொள்ளவென இவ்வுலகில் நாம் செய்ய வேண்டிய பல நற்காரியங்களை நபி (ஸல்) அவர்கள் எடுத்தியம்பியுள்ளார்கள். அபூபக்கர் (ரலி) அவர்கள் வழியாக, சுவர்க்கத்தை கடமையாக்கும் காரிwயங்களை நபி (ஸல்) அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள், 'இன்று உங்களில் நோன்பு நோற்றிருப்பவர் யார்?' என்று கேட்டார்கள். அதற்கு அபூபக்கர் (ரலி) அவர்கள் 'நான்' என்றார்கள். 'இன்றைய தினம் உங்களில் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்றவர் யார்?' என்று கேட்டார்கள். அதற்கும் அபூபக்கர் (ரலி) 'நான்' என்றார்கள். 'இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களில் யார்?' என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்கர் (ரலி) அவர்கள் 'நான்' என்றார்கள். 'இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களில் யார்?' என்று கேட்க, அதற்கும் அபூபக்கர் (ரலி) அவர்கள் 'நான்' என்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், 'எந்த மனிதர் இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தோரோ அவர் சுவர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்ல' என்றார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம்)

நோன்பு நோற்றல், நோயாளியை நலம் விசாரித்தல், ஜனாஸாவைப் பின் தொடர்ந்து செல்லுதல், ஏழைக்கு உணவளித்தல் என்ற நான்கு காரியங்களும் ஒரு மனிதரிடம் ஒரு நாளில் ஒரு சேர நடந்து விட்டால் அவர் சுவர்க்கத்திற்குப் போவது உறுதியாகி விடும்.

நோன்பு நோற்றல்
இந்த நல்லறங்கள் குறித்து நபி (ஸல்) அவர்கள் தனித் தனியாகவும் சிறப்பித்து கூறியுள்ளார்கள்.

இறைவனுக்குச் செய்கின்ற வணக்கங்களில், அவனுக்கு மிகவும் விருப்பத்திற்குரிய காரியங்களில் நோன்பு முக்கிய இடம் பெறுகிறது. மறுமை நாளில் இறைவன் கூலி வழங்கும் போது இதற்குரிய கூலி தனிச்சிறப்பு பெற்றிருக்கும். இறைவனே இதற்குரிய கூலியை வழங்குவான். மேலும் நோன்பு நோற்றிருக்கும் போது நம் வாயில் ஏற்படும் துர்வாடையை, மிக உயர்ந்த கஸ்தூரி வாடைக்கு ஒப்பானதாக அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும். அதனால் நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேச வேண்டாம். முட்டாள்தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் நான் நோன்பாளி என்று இரு முறை கூறட்டும். என் உயிர் என் வசம் கைவசம் உள்ளதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்தது. 'எனக்காக நோன்பாளி தமது உணவையும் பானத்தையும் இச்சையையும் விட்டு விடுகிறார். நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது, அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்' (என்று அல்லாஹ் கூறுவதாக) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புஹாரி)

மற்றொரு சந்தர்ப்பத்தில், 'ஒரு மனிதன் தமது குடும்பத்தினரிடமும் தமது குழந்தைகளிடமும் தமது அண்டை வீட்டாரிடமும் சோதனையில் ஆழ்த்தப்படும் போது தொழுகை, நோன்பு, தர்மம், (நல்லதை) ஏவுதல், (தீமையை) விலக்குதல் ஆகிய காரியங்கள் அதற்குப் பரிகாரமாக அமையும்' என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
(ஆதாரம்: புஹாரி)

இத்தனை சிறப்புமிக்க நோன்பை ரமளான் மாதம் முழுவதும் நோற்பது கட்டாயக் கடமையாகும். இது தவிர உபரியான நோன்புகளை, குறைந்த பட்சம் மாதத்திற்கு மூன்று நாட்களாவது நோற்க வேண்டும். அந்த மூன்று நாட்கள் பிறை 13, 14, 15 ஆகிய நாட்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ள செய்தி நஸயீ உட்பட பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைப் போன்று திங்கள், வியாழன் ஆகிய நாட்களிலும் நோன்பு நோற்கலாம்.

ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நோன்பு நோற்குமாறும், லுஹா தொழுமாறும், வித்ரு தொழுது விட்டு உறங்குமாறும் ஆக, மூன்று விஷயங்களை நபி (ஸல்) அவர்கள் எனக்கு வலியுறுத்தினார்கள். நான் மரணிக்கும் வரை அவற்றை விடமாட்டேன் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள். 
(ஆதாரம்: புஹாரி)

ஜனாஸாவை பின்தொடர்தல்
மேலும் சுவர்க்கத்தைக் கடமையாக்கும் மற்றொரு காரியமாக முஸ்லிம்களின் ஜனாஸாவைப் பின் தொடர்தலும் அடங்கியுள்ளது. ஓரிறைக் கொள்கையை ஏற்றுக்கொண்டு வாழும் முஸ்லிம்கள் மரணித்து விடும் போது, அவரது ஜனாஸாவில் கலந்து கொண்டு, தொழுது, அவரை அடக்கம் செய்யும் வரை இருப்பது மேலும் மேலும் நன்மைகளை அள்ளித் தரும் நற்செயலாகும். மேலும் ஒரு முஸ்லிம், இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகளில் இதும் ஒன்று எனவும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

'எவர் ஒருவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ஒரு முஸ்லிமுடைய ஜனாஸாவைப் பின் தொடர்ந்து சென்று அதற்காகப் பிரார்த்தனைத் தொழுகை நடத்தப்பட்டு, அது அடக்கம் செய்யப்படும் வரை அதனுடன் இருந்தாரோ நிச்சயமாக அவர் நன்மையின் இரண்டு குவியலைப் பெற்றுத் திரும்புவார். ஒவ்வொரு குவியலும் உஹுது மலை போன்றதாகும். எவர் அதற்காகப் பிரார்த்தனை (தொழுகையை) மட்டும் முடித்து விட்டு, அதனை அடக்கம் செய்யும் முன்னர் திரும்பி விடுகிறாரோ அவர் ஒரு குவியல் நன்மையை மட்டும் பெற்றுத் திரும்புவார்' என்றும் அன்னார் கூறினார்கள். 
(ஆதாரம்: புஹாரி)

'ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் ஐந்து ஆகும். அவை: ஸலாமுக்குப் பதிலுரைப்பது, நோயாளியை நலம் விசாரிப்பது, ஜனாஸாவைப் பின் தொடர்வது, விருந்தழைப்பை ஏற்றுக்கொள்வது, தும்முபவருக்கு மறுமொழி கூறுவது ஆகியவையாகும்' என்றும் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
(ஆதாரம்: புஹாரி)

பசித்தவருக்கு உணவளித்தல்
இவை இவ்வாறிருக்க, பசித்தவருக்கு உணவளித்தலும் சுவர்க்கத்தைப் பெற்றுத்தரும் காரியங்களில் ஒன்றாக உள்ளது.

அதனால் பசி, பட்டினியுடன் தங்கள் வாழ்க்கையைக் கழிப்போரை முஸ்லிம்கள் கண்டு கொள்ளாமல் இருந்துவிட முடியாது. அவர்களது பசியைப் போக்கும் வகையில் உணவளிக்க வேண்டும். இறைவன் கெட்டவர்களை பட்டியலிடும் போது, 'அவர்கள் ஏழைகளுக்கு உணவளிக்குமாறு தூண்டவில்லை' என்கிறான். 
(அல்குர்ஆன் 69:34)

நபி (ஸல்) அவர்கள் ஏழைகளுக்கு உணவளிக்குமாறு ஊக்குவித்துள்ளார்கள். இது தொடர்பில் நபி (ஸல்) அவர்கள் ஒரு தடவை, 'பசித்தவருக்கு உணவளியுங்கள். நோயாளியை உடல் நலம் விசாரியுங்கள். (போர்க்) கைதியை (எதிரியிடமிருந்து) விடுவியுங்கள்' என்று குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம்: புஹாரி)(மறுமை நாளில்) அல்லாஹ், 'ஆதமின் மகனே... நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால் நீ எனக்கு உணவளிக்கவில்லை' என்பான். அதற்கு மனிதன், 'என் இறைவா... நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், 'உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியான் இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால் அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள். அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அதை என்னிடம் நீ கண்டிருப்பாய்' என்று கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம்)

நோயாளியை நலம் விசாரித்தல்
மேலும் நோயாளியை நலம் விசாரிக்கச் செல்வதும் சுவர்க்கத்தைப் பெற்றுத்தரும் காரியமாகும். இது தொடர்பில் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது, 'நோயாளியை நலம் விசாரித்துக் கொண்டிருப்பவர் திரும்பி வரும் வரை சுவர்க்கத்தின் கனிகளைப் பறித்துக் கொண்டிருக்கிறார்' என்றுள்ளார்கள்.
(ஆதாரம்: முஸ்லிம், திர்மிதி, அஹ்மத்)

ஆகவே இக்காரியங்களை தொடர்ந்து செய்வதோடு, ஒரே நாளில் இந்நான்கு காரியங்களையும் செய்தால் நாம் சுவர்க்கத்திற்குரியவர் என்பதும் உறுதி செய்யப்பட்டுவிடும். அந்த நற்பாக்கியத்தை அடைந்து கொள்ள முயற்சிப்போம்.

Post a Comment

0 Comments

avatar
Muslim Vanoli